இன்று குழந்தைகளுடன் ப்ளானடோரியம் சென்றிருந்தேன். அங்கே கோடைச் சிறப்பு நிகழ்ச்சியாக, ‘நிலவின் கதை’ என்று அறிவித்திருந்தார்கள். உள்ளே நுழைந்தோம்.

அருமையான நிகழ்ச்சி, நிலா என்பது என்ன என்கிற அறிவியல் ஊகங்களில் தொடங்கி, அதுதொடர்பான புராண, மதம் சார்ந்த நம்பிக்கைகள், விஞ்ஞானத் தகவல்கள், நிலவைத் தொடும் முயற்சிகள், அதில் இந்தியாவின் பங்களிப்பு என்று பலவற்றையும் இருபது நிமிடங்களில் அழகாகச் சொன்னார்கள்.

அதனிடையே, மனிதனுக்கு நிலவுக்குச் செல்லும் ஆர்வம் ஏன் வந்தது என்பதைப்பற்றி ஒரு சிறு பகுதி. அதில், நிலாவுக்குச் செல்வது எப்படி என்று அப்போதைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள் என்று விளக்கினார்கள். குறிப்பாக, Cyrano De Bergerac என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளரின் ஒரு சுவையான கற்பனையை அனிமேஷன் உதவியுடன் விவரித்தார்கள்.

அவருடைய கற்பனை இது:

I sit upon an iron platform and throw a magnet into the air. The magnet will pull up the iron platform with me on it. Then, I simply throw the magnet up again and it pulls the platform up further! And on and on, until I reach the moon!

இதை அவர்கள் விளக்கியதும், சட்டென்று எல்லாரும் சிரித்துவிட்டோம். ‘பெரிய ரைட்டராம், ஆனா எப்படிக் கேனத்தனமா யோசிச்சிருக்கான் பாருய்யா’ என்பதுபோல் பக்கத்தில் ஒருவர் அங்கலாய்த்தார்.

எனக்கு இது ‘சுருக்’கென்றது. இன்றைய அறிவியல் ஞானத்தை வைத்துக்கொண்டு ஆரம்ப முயற்சிகளைக் கேலி செய்வது சரியா என்கிற கேள்வி ஒருபக்கமிருக்க, மேற்படி வாசகம் வேண்டுமென்றே நகைச்சுவைக்காக மிகைப்படுத்தி எழுதப்பட்ட ‘உயர்வு நவிற்சி அணி’ என்று தெளிவாகத் தெரிகிறது, அதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாத அளவு நாம் ரசனையற்றுப்போய்விட்டோமா என்ன?

தவிர, இதுமாதிரி விநோதமான கற்பனைகள்(Crazy Thoughts)தானே சரித்திரம் முழுவதும் நம்முடைய தேடல் ஆர்வத்தை முன்னோக்கிச் செலுத்தியிருக்கிறது? எதிலும் “What If” என்று குறுக்காக யோசிக்கவேண்டும் என்றுதானே இன்றைக்கும் சொல்லித்தருகிறார்கள்?

 

நிலவைப் பார்த்து ரசித்தவர்கள்
….நீளக் கனவு ஒன்றுகண்டார்,
‘இலவம் பஞ்சைப் போல்பறந்து
….இன்றே நிலவை அடைந்திடணும்,
குலவிக் கொஞ்சிக் களித்திடணும்,
….கொள்ளை இன்பம் கண்டிடணும்!’
பலவும் எண்ணும் அவர்நெஞ்சம்,
….பலிக்கும் வாய்ப்போ அன்றில்லை!

அதனால் என்ன? ஆசைக்கு
….அடைக்கும் தாழ்தான் உள்ளதுவா?
இதமாய் உதித்த கற்பனையில்
….எழுத்தா ளர்கள் பற்பலரும்
விதங்கள் நூறாய்ச் சிந்தித்து
….விந்தை வழிகள் கண்டறிந்தார்,
பதமாய் அவற்றுள் ஒருவழியைப்
….பாட்டில் சொல்லப் புகுந்தேனே!

இரும்பால் செய்த ஒருதட்டில்
….ஏறி நாமும் அமர்ந்திடணும்,
அருகே காந்தம் ஒன்றினைத்தான்
….அழகாய் எடுத்துச் சென்றிடணும்,
குருவை வணங்கிக் காந்தத்தைக்
….கொஞ்சம் மேலே வீசிடணும்,
அருவ மான அதன்ஈர்ப்பால்
….அந்தத் தட்டு மேலேறும்!

உயரே சென்ற காந்தத்தை
….உடனே பிடித்து மறுபடியும்
அயர்வில் லாமல் நாம்வீச
….ஆஹா! மீண்டும் உயர்ந்திடுவோம்!
மயக்கம் இன்றி இப்பணியை
….மணிக்க ணக்காய்ச் செய்தாலே,
பயனும் உண்டு, அந்நிலவில்
….பதியும் விரைவில் நம்பாதம்!

அன்று நடந்த இக்கதையை
….அறிவில் வளர்ந்த நாமெல்லாம்
இன்று படித்தால் சிரித்திடுவோம்,
….இரக்க மின்றிக் கேலிசெய்வோம்,
முன்னே செலுத்தும் அறிவியலின்
….முன்பாய்ச் செல்லும் கற்பனைதான்
தொன்று தொட்டு நம்முலகைத்
….துடிப்பாய்ப் படிகள் உயர்த்தியதே!

***

 

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book