சித்திரை மாதம் வந்தவுடன்
….சித்திரம் எழுதக் கற்றிடுவேன்,
அத்தனை பொருளும் காகிதத்தில்
….அப்படி யேநான் வரைந்திடுவேன்!

நல்வை காசி மாதத்தில்
….நலமுடன் வாழக் கற்றிடுவேன்,
வில்போல் உடலைத் தான்வளைத்து
….விதவித யோகா செய்திடுவேன்!

ஆனி மாதம் ஆனவுடன்
….அழகுக் கலைகள் நான்கற்பேன்,
தேனி ருக்கும் பூப்போலே
….தினமும் புதிதாய் மிளிர்ந்திடுவேன்!

ஆடி மாதத் தில்நானும்
….அறிவை வளர்க்கும் நூலகத்தைத்
தேடிச் சென்று சேர்ந்திடுவேன்,
….தித்திக் கும்நூல் பலகற்பேன்

ஆவணி மாதம் வந்ததுகாண்
….அற்புத நடனம் நான்பயில்வேன்,
நோவ னைத்தும் நான்ஆட
….நொடியில் ஓடும் அப்புறமே!

புரட்டா சியிலே நான்நல்ல
….புதுமைக் கவிதை எழுதிடுவேன்,
புரட்டில் லாத உண்மைகளைப்
….பொலிவுடன் எழுதித் தந்திடுவேன்!

ஐப்பசி மாதம் மழைபொழியும்,
….அறுசுவைச் சமையல் கற்றிடுவேன்,
கைப்பக் குவத்தால் இவ்வுலகின்
….கடும்பசி நானும் தீர்த்திடுவேன்!

கார்த்திகை மாதம் தீபஒளி,
….கணினியும் இணையமும் நானறிவேன்,
பார்வலம் என்றன் விரல்நுனியில்,
….படித்தே மகிழ்வேன் நாளெல்லாம்!

மார்கழி மாதம் குளிரதிகம்,
….மகிழ்வுடன் பாடல் நான்கற்பேன்!
சீர்மிகு ஆண்டாள் பாசுரத்தைச்
….சிறப்பாய்ப் பாடிக் களித்திடுவேன்!

பொன்தை மாதம் வளம்பொங்கும்,
….புதிதாய் ஒருமொழி கற்றிடுவேன்,
இன்னொரு பாஷை கற்பதனால்
….என்றும் நன்மை உண்டென்பேன்!

மாசி மாதம் பிறந்தவுடன்
….மகிழ்வாய்க் கற்பேன் தற்காப்பு,
ஏசி யாரும் கேலிசெய்தால்
….எட்டி உதைத்தே தப்பிடுவேன்!

பங்குனி மாதம் மேடையிலே
….பாங்காய்ப் பேசப் பழகிடுவேன்
எங்கும் என்பெயர் ஒலித்திடுமே,
….எல்லாக் கலையும் கற்பதனால்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book