சிறுமி:

கல்லைச் செதுக்கிச் சிற்பியெலாம்
….கவின்மிகு சிலையாய் மாற்றுகிறார்,
அல்லும் பகலும் பாடுபட்டு
….அழகுடன் நமக்கு அளிக்கின்றார்!

அதுபோல் என்றன் பேனாவை
….ஆர்செய் தாரோ சொல்லப்பா,
இதுபோல் அழகாய்ச் செதுக்கிடவே
….எங்கே கற்றார் அவரப்பா?

தந்தை:

பேனா செய்ய ஆள்வைத்தால்
….பெரும்செ லவாகும் என்கண்ணே,
தானாய் அதுவும் வாராது,
….தரைமேல் மரத்தில் காய்க்காது!

அறிவியல் நுட்பர் பலர்சேர்ந்து
….அறிவுள எந்திரம் செய்துள்ளார்,
பொறியினைத் தட்டிடப் பொருள்பலவும்
….பொலபொல என்றே வந்துவிழும்!

சிறுமி:

அப்படி யானால் சிற்பியெலாம்
….அகிலத் துக்கு வேண்டாமா?
செப்பிடு வித்தை போல்பொருள்கள்
….செம்மை யாக உதிப்பதனால்!

தந்தை:

எந்திரம் செய்வதும் சிற்பிகள்தான்,
….எழிலினை அதனுள் வைக்கின்றார்,
மந்திரம் போலே பொருளெல்லாம்
….மளமள என்றே வருவதற்கு!

உளிக்குப் பதிலாய் அறிவியலை
….உணர்ந்தே இவரும் பயன்படுத்த,
களிப்புடன் பலபொருள் நாம்பெற்றோம்,
….காசும் மிச்சம் எல்லார்க்கும்!

சிற்பிகள் மட்டும் செயவல்ல
….சிறப்புள பொருள்பல இங்குண்டு,
மற்றவை செய்வது எந்திரமே,
….மாற்றம் என்றும் நிரந்தரமே!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book