இந்த அணியில் பதினொருபேர்,
….எதிர்த்து நிற்போர் பதினொருபேர்,
பந்து, மட்டை, ஸ்டம்பென்று
….பலஆ யுதங்கள் வைத்திருப்பர்,
உந்திச் சுண்டும் நாணயத்தால்*
….ஒருவர் முதலில் களம்காண்பார்,
விந்தை ஆட்டம் பார்ப்பதற்கே
….வெகுவாய் ஜனமும் கூடிடுமே!

ஒருவர் பந்தை வீசிடுவார்,
….உடனே ஒருவர் அதைத்தடுப்பார்,
உருவிச் செலுத்தும் வாள்போல
….ஒருபேட் கொண்டே அடித்திடுவார்,
இருளில் ஓடும் அரவம்போல்
….எகிறும் பந்தைச் சிலர்துரத்த
இருவர் இங்கே ஸ்டம்ப்பிடையே
….எட்டிப் பாய்ந்து ரன்சேர்ப்பர்!

எல்லைக் கோட்டை அப்பந்து
….எழிலாய்த் தாண்டிக் குதித்துவிட்டால்,
பல்லைப் பெயர்க்கும் வேகத்தில்
….பாய்ந்து சென்று கடந்துவிட்டால்,
நெல்சேர் குருவி போல்பறந்து
….நேயர்** பக்கம் விழுந்துவிட்டால்
தொல்லை இன்றி ரன்குவியும்,
….துடிப்பாய்ப் பெருகும் ஸ்கோரும்தான்!

பறந்து வந்த பந்தொன்று
….பாங்காய் ஸ்டம்பைத் தகர்த்திடலாம்,
இறங்கி பேட்ஸ்மேன் காலினைத்தான்
….இரக்க மின்றித் தாக்கிடலாம்***,
சிறப்பாய் அடித்துப் பறந்தபந்தை
….சிக்கென் றொருவர் பிடித்திடலாம்,
மறந்து இவற்றில் சிக்கியவர்
….மயங்கி மீள்வர் பெவிலியனே!

முதலாம் அணியின் வீரரெல்லாம்
….முயன்று சேர்த்த ரன்களையே
இதமாய்க் கூட்டி ஸ்கோர்கார்டில்
….எழுதித் தருவர் எதிரணிக்கு,
‘இதனை நீங்கள் துரத்திடணும்,
….எக்ஸ்ட்ரா ஒருரன் எடுத்திடணும்,
அதனைத் தடுக்கும் இவ்வணிதான்,
….ஆட்டம் சுவையாய் ஆகிடுமே!’

முன்போ கிரிக்கெட் என்றாலே
….முனைந்தா டிடுவர் நாள்கணக்காய்,
பின்னர் அதுவே ஒருநாளில்
….பெரிதும் சுருங்கிப் போனதுவே!
இன்றோ அதுவும் அதிகமென்று
….இரண்டு மணியில் முடிக்கின்றார்,
பொன்னை வைக்கும் இடத்தினிலே,
….பூவை வைக்கும் கதைபோலே!

* Coin : Toss
** Viewers
*** LBW

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book