மாலை வந்ததும் வானத்தில்
….மளமள வென்று இருட்டைத்தான்
மூலை முடுக்குகள் எங்கேயும்
….மும்முர மாகப் பூசுவதார்?

இருட்டின் நடுவே வானத்தில்
….இங்கும் அங்கும் அழகழகாய்
வருகிற நட்சத் திரங்களுக்கு
….வழியைச் சொல்வது ஆரம்மா?

நட்சத் திரத்தில் ஒன்றுமட்டும்
….நன்றாய்த் தின்று கொழுத்ததுவோ!
வட்டநி லாவாய் ஆனதுவோ
….வானில் நன்றாய்ச் சிரிக்குதுவோ!

குண்டுத் தொப்பை எடையைத்தான்
….குறைத்திட நிலவு எண்ணிடுதோ!
விண்ணில் ஓடி அதுசிந்தும்
….வியர்வைத் துளிதான் நிலவொளியோ!

ஓட்டத் தாலே அன்றாடம்
…உடலை மெலித்துப் பிறையாகி
வாட்டம் கொண்டு நிலவொருநாள்
….வானக் குகையில் மயங்கியதோ!

நண்பன் நிலையைப் பார்த்தபிற
….நட்சத் திரங்கள் ஓடிவந்து,
உண்ணச் சொல்லிப் பால்சோற்றை
….ஊட்டிக் காத்து உதவிடுதோ!

அன்பில் நனைந்த அந்நிலவு
….அதிகம் உண்டு பெருத்திடுதோ,
தின்றது போதும் எனமீண்டும்
….திரிந்தே உடலை மெலித்திடுதோ!

வட்டம், பிறையென நாள்தோறும்
….வடிவம் மாறும் நாடகமேன்?
இட்டத் தோடு நாங்களுனை
….என்றும் ரசிப்போம் நல்நிலவே!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book