சின்னஞ் சிறிய நாடொன்றைச்
….சிறப்பாய் ஆண்டான் ஓரரசன்,
முன்னோர் சொல்லை மதிப்பவனாம்,
….மூர்க்கம் இல்லா நல்லரசன்!

மன்னன் படையில் ஒருகுதிரை,
….மதயா னைபோல் கம்பீரம்,
மின்னல் போலே பாய்ந்திடுமாம்,
….மிடுக்கும் நடையும் சங்கீதம்!

அந்தக் குதிரை மேலேறி
…அரசன் செல்வான் நாடெங்கும்,
வந்தனம் சொல்லி வந்தசனம்,
….வாழ்த்திப் போற்றி வணங்கிடுமாம்!

இதனால் குதிரை மனத்தினிலே,
….ஏறிக் கொண்டது கர்வகனம்,
விதவித சிந்தனை கொண்டதனால்
….விலகிப் போனது நல்லகுணம்!

‘என்மேல் ஏறிச் செல்வதனால்,
….எழிலைப் பெறுவான் அரசனுமே,
என்றால் என்போல் பேரழகு
….எவருக் குண்டு நாட்டினிலே?’

என்றே எண்ணி அக்குதிரை
….எல்லை இல்லா ஆணவத்தில்
பொன்போல் மனத்தைப் புழுதியிலே
….புரட்டிப் பழுதாய் ஆக்கியதாம்.

மறுநாள் மன்னன் குதிரையிலே
….மக்களைக் காணச் செல்கையிலே,
குறுக்கே கிடந்தது ஒருபள்ளம்
….குட்டை யாகச் சேற்றுடனே!

சேற்றைக் கண்ட அக்குதிரை
….சிணுங்கி உடனே நின்றதுவாம்,
‘ஆற்றல் நிறைந்த என்மீது
….அசிங்கச் சேறு படலாமா?’

மன்னன் சிரித்தான், கீழிறங்கி
….மளமள வென்று குட்டையினை
நன்றாய் நொடியில் தாண்டினனாம்,
….நடந்தே சனத்தைச் சந்திக்க!

அரசன் செயலைக் கண்டசனம்
….அவனைப் புகழ்ந்து போற்றியதாம்,
சிரத்தைத் தாழ்த்தி அக்குதிரை
….சிந்தனை யோடு வருந்தியதாம்!

‘கடமை ஆற்றுதல் நற்பெருமை,
….கர்வம் கொள்ளல் ஆகாது,
மடமை யாகச் சிந்தித்தே,
….மடையன் ஆனேன் பணியாது!’

‘அழகைப் போற்றிப் பயனில்லை,
….ஆற்றல் மட்டும் பெரிதில்லை,
பழகும் இனிமை ஒன்றேதான்,
….பதவிக் கென்றும் மரியாதை!’

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book