தினசரிப் பொழுதினில் சிரிப்பினை மறக்கிற கணங்களைக் குறைத்திடுக,
மனத்தினில் பெருகிடும் மகிழ்ச்சியைப் பிறரிடம் குறைவற உரைத்திடுக,
உனக்கென உலகினில் இருக்கிற சிறப்பினை, குறையினை உணர்ந்திடுக,
சினத்தினைப் பிணிக்கிற கயிறினைக் கவனமாய்ச் சிரத்தினில் வைத்திடுக!

அகத்தினில் பிறரது அழுக்கினைச் சேர்ப்பது பிழையெனத் தவிர்த்திடுக,
அகற்றிய குறைகளை, சேர்க்கிற நிறைகளைப் பெரிதென மதித்திடுக,
சகத்தினில் எனக்கிணை எவரென நினைக்கிற திமிரினைக் குறைத்திடுக,
பகலவன் புரிகிற பணிகளில் ஒருதுளி மனிதரும் புரிகுவரோ?

கரிசனம் எனுமொரு குணத்தினை மறந்தவர் புழுவினும் கீழாவார்,
பரிவுடன் எவரையும் பார்க்கிற ஒருவனைக் கடவுளும் காதலிப்பார்,
சரியெது தவறெது புரிந்தபின் சலனமும் பிறப்பது தவறாகும்,
நரியெனப் பிறரினை ஏய்த்ததில் பிழைப்பது நரகலின் இணையாகும்!

பணமெனும் சாவியைக் கும்பிடு வார்பலர், வீட்டினை மறந்திடுவார்,
குணங்களின் குவியலும் தருகிற சுகமதை அறிந்தபின் மாறிடுவார்,
கணந்தொறும் உலகினில் பதியுமென் விதையெனப் பணிகளில் இறங்கிடுவோர்,
வணங்கிடும் பூமியும் வந்தனம் சொல்லியே அவரது தாள்களில்தான்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book