அதியன் என்ற அரசன் நாட்டைச்
சுதிவில காமல் சுகமாய் ஆண்டான்,
கதியென் றவனது காவலி னுள்ளே
மதிசேர் மக்கள் மகிழ்ந்தே வாழ்ந்தார்!

அதியன் நாட்டின் அருகே ஆங்கோர்
அதிசய நெல்லி அரிதாய்க் காய்க்க
குதித்தே மகிழ்ந்தார் குறிஞ்சித் தமிழர்,
‘பதியே, மன்னா, பார்நீ’ என்றார்.

‘வளமை தருமிவ் வண்ணப் பழத்தால்
இளமை என்றும்; இல்லை மரணம்,
அளவில் புகழோய், அரசே உனக்காய்
உளமே கனிந்து உதிர்த்தது மரமே!’

மன்னன் பழத்தை மகிழ்ந்தே பார்த்தான்,
தின்னத் துடித்தான் திகட்டாக் கனியை!
‘என்னை விடவும் இதனை உண்ண
இன்னும் தகுதி எவர்க்குண் டெ’ன்றான்!

அப்போ தங்கே அவ்வை வந்தார்,
செப்பில் லாத செம்பொன் போலே
ஒப்பில் லாத உயர்ந்த தமிழால்,
செப்பும் கவிதை சிறந்தே திகழ!

அவரைக் கண்ட அரசன் மகிழ்ந்தான்,
உவந்தே பழத்தை உடனே தந்தான்,
அவையில் இருந்த அறிஞர் திகைத்தார்
அவச்சொல் பேசி அவலை இடித்தார்!

மன்னன் சிரித்தான், ‘மற்றவர் போலே
சின்னப் பயல்நான், சிந்தைப் பசிக்கு
அன்னம் போடும் அவ்வை முன்னே!
என்றும் வாழ ஏற்றது தமிழே!’

பழத்தைத் தின்ற பாட்டியும் வாழ்ந்தனள்,
பழத்தைத் தந்தோன் பண்பும் வாழ்ந்தது,
பழகப் பழகப் பரக்கும் மனமே,
அழகே அதுதான் அறிவாய் மனமே!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book